கர்நாடகத்தில் குஜராத்தின் அமுல் பால் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு


கர்நாடகத்தில் குஜராத்தின் அமுல் பால் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு
x

கர்நாடகத்தில் குஜராத்தின் அமுல் பால் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் குஜராத்தின் அமுல் பால் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமுல் பால் விற்பனை

கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி என்ற பெயரில் பால், தயிர், மோர் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து பாலை மொத்தமாக வாங்கி கர்நாடக பால் கூட்டமைப்பு பால், பாலில் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் கர்நாடகத்தில் ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு பால், தயிர், மோர் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் கர்நாடக பால் கூட்டமைப்புடன், அமுல் நிறுவனத்தை இணைக்கவும் ஏற்கனவே பா.ஜனதா அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது அமுல் நிறுவனம் கர்நாடகத்தில் பால் மற்றும் தயிர் விற்பனையை தொடங்க இருப்பதால், நந்தினி பால் விற்பனையை முடக்கவும், கர்நாடக பால் கூட்டமைப்பை அழிக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அமுலுக்கு எதிராக பிரசாரம்

இதையடுத்து, அமுல் பால் விற்பனைக்கு அனுமதி வழங்க கூடாது என்றும், அமுல் பாலுக்கு எதிராகவும், கர்நாடகத்தில் நந்தினி பாலை பாதுகாக்கவும், அதற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 'கோபேக்' அமுல் என்ற வாசகத்துடன் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நந்தினி பால், தயிர் தவிர மற்ற எந்த நிறுவனத்தை சேர்ந்த பாலையும் வாங்க கூடாது என்ற பிரசாரமும் ஆரம்பமாகி உள்ளது.

குறிப்பாக கன்னட அமைப்புகள் அமுல் பால் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் அமுல் பால் விற்பனை செய்யப்பட்டால், அவற்றை எரிப்போம் என்று கன்னட ரக்ஷணே வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா எச்சரித்துள்ளார். கர்நாடக பால் கூட்டமைப்பையும், கன்னட விவசாயிகளையும் பாதுகாப்போம் என்றும் கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தலைவர்கள் கண்டனம்

அதே நேரத்தில் அமுல் பால் விற்பனை, கர்நாடக பால் கூட்டமைப்புடன் அமுலை இணைப்பதற்கு முன்னாள் முதல்-மந்திரிகளான சித்தராமையா, குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நந்தினி பாலுக்கு பதில் அமுல் பால் விற்பனையை ஆரம்பிக்க பா.ஜனதா அரசு தயாராகி வருகிறது. இதனை பா.ஜனதா தலைவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அமுல் பால் விற்பனைக்கு எதிராக கன்னடர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால் குஜராத் அமுல் பால் நிறுவனத்துடன் போட்டியிடும் அளவுக்கு நந்தினி பால் வளர்ந்துள்ளதாகவும், எக்காரணத்தை கொண்டும் கர்நாடக பால் கூட்டமைப்பு மூடப்படாது என்றும் மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story