காவிரி அணைகளின் நீர் இருப்பை ஆராய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும்- மத்திய அரசுக்கு மந்திரி எம்.பி.பட்டீல் வலியுறுத்தல்
காவிரி அணைகளின் நீர் இருப்பு விவரங்களை ஆராய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:-
தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தலையிட வேண்டும்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உண்மை நிலையை ஆய்வு செய்யவில்லை. கர்நாடகம், தமிழ்நாடு அணைகளில் உள்ள நீர் இருப்பை பார்க்கவில்லை. அதனால் மத்திய அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அனுப்பி அணை நீர் இருப்பு விவரங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
அதுவரை தண்ணீர் திறக்கப்படுதை நிறுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கை வழங்கிய பிறகு நீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கலாம். இப்போது நமக்கு கடினமான காலம். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கர்நாடக மத்திய மந்திரிகள் நமது மாநில நலனை காக்க முயற்சி செய்ய வேண்டும். இடர்பாடு சூத்திரத்தை உடனே வகுக்க வேண்டும். நான் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது, பெங்களூருவுக்கு குடிநீர் ஒதுக்கீடு கிடைத்தது. தமிழகத்திற்கான நீர் பங்கீட்டு அளவு குறைக்கப்பட்டது.
சாதகமாக தீர்ப்பு
இதனால் மேகதாது திட்டத்திற்கு பலம் கிடைத்தது. நமது வக்கீல்கள் சரியான முறையில் வாதங்களை எடுத்து வைத்ததால் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மேகதாது திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு பயன் கிடைக்கும். ஆனால் இதனை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை. காவிரி விஷயத்தில் அரசு தனது கடமைகளை சரியான முறையில் செய்து வருகிறது. இதில் பா.ஜனதா குறை சொல்வது சரியல்ல.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.