பிரிந்து போன காதலியை சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் ஜோதிடர்


பிரிந்து போன காதலியை சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் ஜோதிடர்
x

பெங்களூருவில் பிரிந்து போன காதலியை மீண்டும் சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் பறித்த ஆன்லைன் ஜோதிடரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வடமாநிலம் ஆகும். பெங்களூருவில் அவர் வசித்து வருகிறார். ரமேஷ் ஒரு பெண்ணை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உயிருக்கு உயிருக்காக காதலித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேசுக்கும், அவரது காதலிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ரமேசுடன் இருந்த காதலை முறித்து விட்டு அந்த இளம்பெண் பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக ரமேஷ் மிகுந்த மன வருத்தத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சமூக வலைதளம் மூலமாக கடந்த மாதம்(ஆகஸ்டு) ரமேசுக்கு ஒரு நபரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர், தன்னை ஜோதிடர் என்று கூறி இருந்தார். அதன்பிறகு 2 பேரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

அவரிடம் தனது காதல் தோல்வி குறித்தும், காதலி பிரிந்து சென்றிருப்பது குறித்தும் ரமேஷ் தெரிவித்துள்ளார். உடனே அவர், தான் ஜோதிடர் என்பதால் சில பரிகார பூஜைகளை செய்தால், பிரிந்து சென்ற காதலி மீண்டும் வந்து சேர்ந்து விடுவார் என ரமேசிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேசும், அந்த ஜோதிடரிடம் பரிகார பூஜை செய்வதற்காக பணம் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரமேசிடம் இருந்து ரூ.46 ஆயிரம் வரை அந்த ஜோதிடர் வாங்கி இருந்தார்.

ஆனால் ரமேசின் காதலி மீண்டும் வந்து சேரவில்லை. அதே நேரத்தில் இனனும் பெரிய பூஜை செய்ய வேண்டும், அதற்கு பணம் கொடுக்கும்படி ஜோதிடர் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்ட ரமேஷ், ரூ.46 ஆயிரத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஜோதிடரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story