ஆந்திர பிரதேசம்: குளத்தில் நீச்சல் அடித்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி


ஆந்திர பிரதேசம்:  குளத்தில் நீச்சல் அடித்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
x

ஆந்திர பிரதேசத்தில் குளத்தில் நீச்சல் அடிக்க சென்ற 6 மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் மாணவர்கள் 6 பேர் அருகேயிருந்த குளத்தில் நீச்சல் அடிப்பதற்காக ஒன்றாக சென்றுள்ளனர். கோடை வெயிலில், குளுமையான சூழலில் குளத்தில் இறங்கிய அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

குளத்தில் குதித்த மாணவர்களில் சிலர் நீரின் ஆழத்திற்கு சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் சிக்கி கொண்டனர். இதனால் தங்களை காப்பாற்றும்படி உதவி கேட்டு அவர்கள் அலறியுள்ளனர்.

அவர்களது சத்தம் கேட்டு நீச்சல் பயிற்சி பெற்ற சிலர் குளத்திற்குள் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 2 மாணவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

எனினும், 4 மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். இதன்பின்னர், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்கள் சிந்தலா கவுசிக், முன்னாங்கி சிவாஜி, மட்டினேனி சுப்ரமணியம் மற்றும் அப்புரி ஹரி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். நீச்சல் அடிக்க சென்று குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.


Next Story