கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்திற்கு 3 நிறுவனங்களிடம் அரிசி வாங்க முடிவு


கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்திற்கு 3 நிறுவனங்களிடம் அரிசி வாங்க முடிவு
x
தினத்தந்தி 25 Jun 2023 3:30 AM IST (Updated: 25 Jun 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்திற்கு 3 நிறுவனங்களிடம் இருந்து அரிசி வாங்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்திற்கு 3 நிறுவனங்களிடம் இருந்து அரிசி வாங்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு மறுப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்காக 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவையாகும். இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து ஒரு கிலோ அரிசியை ரூ.34-க்கு வாங்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன், கர்நாடக உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச். முனியப்பா ஆலோசித்தார்.

அப்போது கர்நாடகத்திற்கு அரிசி வழங்க சாத்தியமில்லை என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து விட்டார். ஏற்கனவே மத்திய அரசு கர்நாடகத்திற்கு அரிசி வழங்க மறுப்பு தெரிவித்து இருந்ததால், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த மாநிலங்களில் அரிசி விலை அதிகமாக இருந்ததால், அவர்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சித்தராமையா ஆலோசனை

இதனால் வருகிற ஜூலை 1-ந் தேதியில் இருந்து அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்குவது தாமதம் ஆகும் என்றும், ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து திட்டம் தொடங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது. அதே நேரத்தில் அன்னபாக்ய திட்டத்திற்காக 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசின் கீழ் செயல்படும் 3 நிறுவனங்களிடம் இருந்து வாங்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டது.

இதுகுறித்து நேற்று விதானசவுதாவில் மந்திரி கே.எச்.முனியப்பா, உணவுத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினர். அப்போது மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.சி.சி.எப், நாபெட், கேந்திரிய பண்டாரா ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்து அரிசியை மொத்தமாக கொள்முதல் செய்வது என்று சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்திற்கு முன்பாக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

2 கிலோ சோளம்

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு மறுத்து விட்ட்து. இதன் காரணமாக மத்திய அரசின் கீழ் செயல்படும் 3 நிறுவனங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் அரிசிக்கு இன்னும் விலை முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் மைசூரு மண்டலத்தில் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 2 கிலோ ராகியும், வடகர்நாடக மாவட்டங்களுக்கு 2 கிலோ சோளம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. தேர்தலின் போது நாங்கள் கொடுத்த 5 வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை் நிறைவேற்றி உள்ளோம். அன்னபாக்ய திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்க மத்திய அரசு அரிசி தர மறுப்பதால் தாமதமாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், சித்தராமையா தலைமையிலான ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு வாரத்தில் டெண்டர்

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் பி.பி.எல். அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் குறித்து முதல்-மந்திரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களான நாபெட், என்.சி.சி.எப், கேந்திரிய பண்டாராவிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்து, கர்நாடக மக்களுக்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த நிறுவனங்களிடம் கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். உடனடியாக டெண்டர் சம்பந்தப்பட்ட பணிகளை தொடங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் டெண்டர் விவகாரம், அரிசி வழங்குவது குறித்து கர்நாடக அரசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளனர்.

நிறுவனங்களே சப்ளை

அந்த 3 நிறுவனங்களுமே அன்னபாக்ய திட்டத்திற்கான அரிசியை, அவர்களே நேரிடையாக சப்ளை செய்வார்கள். அரிசியின் விலை என்ன? உள்ளிட்டவை குறித்து 3 நிறுவனங்களுமே முடிவு எடுப்பார்கள். இதற்கு முன்பு கூட அவர்கள் இதுபோன்று பி.பி.எல். அட்டைதாரர்களுக்கு அரிசி சப்ளை செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்திற்குள் 3 நிறுவனங்களும் தகவல் அளிக்க உள்ளனர்.

அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசும் சம்மதம் தெரிவிப்பது என்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு, அன்னபாக்ய திட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு அரிசி தர மறுத்து அரசியல் செய்த காரணத்தால் அன்னபாக்ய திட்டம் தாமதமானது. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.

8 கிலோ அரிசி

முதல்-மந்திரி சித்தராமையா, அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 2 கிலோ ராகி மற்றும் சோளம் கொடுப்பதாக கூறியுள்ளதால், அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசிக்கு பதில் 8 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story