பா.ஜனதா பிரமுகர் மீது தாக்குதல்: மடிவாளா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர்
பா.ஜனதா பிரமுகர் மீதான தாக்குதலை கண்டித்து மடிவாளா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா எம்.பி. தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:
பா.ஜனதா பிரமுகர் மீதான தாக்குதலை கண்டித்து மடிவாளா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா எம்.பி. தர்ணா போராட்டம் நடத்தினர்.
பா.ஜனதா பிரமுகர் மீது தாக்குதல்
கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர். பகிரங்க பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இந்த நிலையில், நேற்று பெங்களூருவில் வேட்பாளர்கள் பலரும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பி.டி.எம். லே-அவுட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்க ரெட்டி வீட்டின் அருகே பா.ஜனதா ஆதரவாளர்கள் சிலர் நடந்து சென்றனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள், பா.ஜனதா பிரமுகர் ஹரிநாத்தை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆஸ்பத்திரிக்கு வந்து ஹரிநாத்தின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
அண்ணாமலை தர்ணா
இந்த நிலையில் ேநற்று பெங்களூரு மடிவாளா போலீஸ் நிலையம் முன்பு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா எம்.பி. மற்றும் பா.ஜனதாவினர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், பா.ஜனதா பிரமுகர் ஹரிநாத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ேபாலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹரிநாத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத் மற்றும் நிதிஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மடிவாளா சந்தை பகுதியில் போராட்டம் நடத்தினர்.