இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் அறிவிப்பு


இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2023 3:02 PM GMT (Updated: 9 Sep 2023 4:23 PM GMT)

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடத்திற்கான ஒப்பந்தம் பற்றி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான வழிகளை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு பெரிய கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்றை பற்றி இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இன்று அறிவித்து உள்ளன.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான திட்ட தொடக்கம் என்பது, இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இதுபற்றி பிரதமர் மோடி பேசும்போது, உங்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். என்னுடைய நண்பர் அதிபர் ஜோ பைடனுடன் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக தலைமையேற்பதற்காக நான் மிக மகிழ்கிறேன்.

ஒரு வரலாற்று மற்றும் முக்கிய ஒப்பந்தத்தின் முடிவு பற்றி நாம் அனைவரும் இன்று பார்க்கிறோம். வருகிற நாட்களில், இந்தியா, தெற்காசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான பொருளாதார ஒருங்கிணைப்புக்கான சிறந்த ஊடகம் ஆக அது இருக்கும் என பேசியுள்ளார்.

உலகம் முழுவதும் இணைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான ஒரு நீண்டகால வழிகாட்டுதலாக இந்த பெரிய ஒப்பந்தம் இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். இந்த இணைப்பு வழித்தடத்திற்கான ஒரு பகுதியாக இருக்க கூடிய அனைத்து தலைவர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.


Next Story