ராணுவத்தில் ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்: தலைமை தளபதி அறிவிப்பு


ராணுவத்தில் ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்: தலைமை தளபதி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2022 8:35 AM GMT (Updated: 19 Jun 2022 2:30 AM GMT)

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யும் உச்சபட்ச வயது வரம்பை 21 ல் இருந்து 23 ஆக மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறாத நிலையில், ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு குறித்து ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செயல்முறை விரைவில் தொடங்க உள்ளது. அடுத்த 2 நாட்களுக்குள் http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பிறகு எங்கள் ராணுவ ஆள்சேர்ப்பு அமைப்பு விரிவான அட்டவணையை அறிவிக்கும்.

முதல் அக்னிவீர் டிசம்பரில் (2022) எங்கள் படைப்பிரிவு மையங்களில் பயிற்சியில் சேருவர். பின்னர் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பயிற்சிக்கு பிறகு வழக்கமான பணியில் இணைவர். இவ்வாறு ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார்.


Next Story