ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்; நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை


ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்; நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2023 10:59 AM IST (Updated: 28 Nov 2023 11:09 AM IST)
t-max-icont-min-icon

அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார்.

கோட்டா,

ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு தயாராவதற்காக வருகை தருகின்றனர். நீட் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

எனினும், அவர்களில் பலர் படித்து வரும்போதே தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து வருகிறது. படிப்பிற்கான அழுத்தம் மற்றும் மாணவர்களிடையே தோல்வி பற்றிய பயம் ஆகியவையே இதற்கு காரணம் என பலரும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு நீட் தேர்வு பயிற்சி பெறுவதற்காக போரித் என்ற மாணவர் சென்றுள்ளார். அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். அவர் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை அவருடைய அறையில் தூக்கு போட்டபடி காணப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த, சக மாணவர்கள் மற்றவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

கடைசியாக 4 மணியளவில் அவரை மற்ற மாணவர்கள் பார்த்துள்ளனர். இதன்பின் 7 மணிக்கு பின்பும் அவர் அறையை விட்டு வெளியே வராத சூழலில், சந்தேகத்தின்பேரில் அறைக்கு சென்று பார்த்தபோது, இந்த விசயம் தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. ராஜஸ்தானில், இந்த ஆண்டில் நடந்த 28-வது சம்பவம் இது ஆகும். கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story