தெலுங்கானாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி; தனியார் கல்லூரி மாணவர் வகுப்பறையில் தற்கொலை


தெலுங்கானாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி; தனியார் கல்லூரி மாணவர் வகுப்பறையில் தற்கொலை
x

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் என 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



ரங்காரெட்டி,


தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நரசிங்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அவர் நகுலா சாத்விக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து இன்று சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவர் வகுப்பு முடிந்த பின்னர் நேற்றிரவு 10.30 மணியளவில் தூக்கு போட்டு உயிரிழந்து இருக்க கூடும். இந்த முடிவை அவர் ஏன் எடுத்து உள்ளார் என்பது விசாரணைக்கு பின்பே கூற முடியும்.

எனினும், கல்லூரி நிர்வாகம் அளித்த சித்ரவதையால் மாணவர் இந்த முடிவை எடுத்து உள்ளார் என அவரது பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். அதனால், பிரிவு 305-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் என 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் காகத்தியா மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பிரீத்தி. இளநிலை மருத்துவரான அவர், கடந்த 22-ந்தேதி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஐதராபாத் நகரில் உள்ள நிம்ஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 26-ந்தேதி (ஞாயிற்று கிழமை) இரவு 9.10 மணியளவில் உயிரிழந்து உள்ளார். அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில், எம்.ஜே.எம். மருத்துவமனையின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சமூக ஊடகம் மற்றும் அவர்கள் இருவருக்கு இடையேயான தனிப்பட்ட சாட்டிங் விவரங்களை ஆய்வு செய்ததில், பிரீத்தி ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த மாணவர் மீது ராகிங் தொல்லைக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை வந்த பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேபோன்று, நிஜாமாபாத் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தாசரி ஹர்ஷா என்பவர், கடந்த சனி கிழமை தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கானாவில், ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவி ஒருவர் தனது உறவினர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்த விவரம் நேற்று தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் இன்று கூறினர்.


Next Story