கேரளாவில் 4-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: போலீசார் தடியடி
முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கேரளாவில் 4-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் நடந்த தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எர்ணாகுளம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய போது, முதல்-மந்திரி பினராயி விஜயன் 2016-ம் ஆண்டு துபாய் சென்ற போது, கரன்சி நோட்டு பார்சலை எடுத்துசென்றதாகவும், ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரியின் வீட்டில் இருந்து முதல்-மந்திரியின் வீட்டிற்கு வந்த பிரியாணி பாத்திரம் மூலமாக தங்கம் கடத்தப்பட்டதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்கட்சியினர் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 4-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுபோல் கொல்லம், கோட்டயம், கொச்சி, கோழிக்கோடு போன்ற இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரியாணி பாத்திரம் ஏந்தி பேரணி நடத்தினர்.
கோட்டயத்தில் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் மீது செருப்பு, பாட்டில்களை போராட்டக்காரர்கள் வீசினர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். கொல்லம் மற்றும் மலப்புரத்தில் பா.ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.