"யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்" - குஜராத் பால விபத்தில் 12 உறவினர்களை பறிகொடுத்த பாஜக எம்.பி
குஜராத்தில் பாலம் விழுந்து விபத்துக்குள்ளான மோர்பி பகுதியில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார்.
ஆமதாபாத்,
குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அவர்களில், ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி. மோகன்பாய் குந்தாரியாவின் தங்கை குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 12 உறவினர்களை பறிகொடுத்த பாஜக எம்.பி மோகன்பாய் குந்தாரியா கூறுகையில்,
தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் தனது சகோதரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. பாலம் விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மீட்பு பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அவர், தனது கண் முன்பே ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் எடுக்கப்பட்டதாக சோகத்துடன் கூறியுள்ளார்.