நகை வியாபாரியிடம் தங்கம், ரூ.6 லட்சம் பறிப்பு; ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேர் சிக்கினர்
பெங்களூருவில் போலீஸ்காரர்கள் என கூறி நகை வியாபாரியிடம் தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்ற ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் போலீஸ்காரர்கள் என கூறி நகை வியாபாரியிடம் தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்ற ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்க கட்டிகள், பணம்
பெங்களூரு மைசூரு சாலையில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையம் அருகே சுந்தரம் என்பவர் நடந்து சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் 3 பேர் வழிமறித்தனர். மேலும், அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர். இதையடுத்து அவரிடம் இருந்த பையை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் தங்க கட்டிகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது.
இதையடுத்து அவர்கள் தங்க கட்டிகள் மற்றும் பணம் குறித்து சுந்தரத்திடம் கேட்டனர். அப்போது அவர் தான் ஒரு நகை வியாபாரி எனவும், நகைகள் செய்வதற்காக சிவமொக்காவில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து சுந்தரத்திடம் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பணத்தை பெற்று கொண்டு ஒரு காரில் 3 பேரும் சென்றனர்.
நீண்டநேரமாகியும், எந்த தகவலும் கிடைக்காததால், சுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பேடராயன்புரா போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறினார். அப்போது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் போலீஸ்காரர்கள் என கூறி நகை வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மற்றும் 2 ஆட்டோ டிரைவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவர்களிடம் இருந்து தங்க கட்டிகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.