கிராம பெண் கணக்காளர் தற்கொலை வழக்கில் மாமனார் உள்பட 2 பேர் கைது
கிராம பெண் கணக்காளர் தற்கொலை வழக்கில் மாமனார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கணவர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு:
கிராம பெண் கணக்காளர் தற்கொலை வழக்கில் மாமனார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கணவர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தற்கொலை
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா தளூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். வனத்துறை ஊழியர். இவரது மனைவி கிருஷ்ணா பாய் துகாரம். இவர் தளூர் கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுபாஷ் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா பாய் துகாரம் தனது தோழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாமனார் கைது
இதுகுறித்து கிருஷ்ணா பாயின், தந்தை வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்றும், சுபாஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உன்சூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து உன்சூர் போலீசார் கிருஷ்ணாபாயின் கணவர் சுபாஷ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணாபாயை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மாமனார் பாலப்பா அண்ணப்பா, சுபாசின் அண்ணன் அமர்நாத்
பட்டீல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணாபாயின் கணவர் சுபாஷ் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.