கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி: மனைவி உள்பட 4 பேர் கைது


கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி: மனைவி உள்பட 4 பேர் கைது
x

பெங்களூருவில், கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில், கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கள்ளக்காதல்

பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபிதரஹள்ளு பகுதியில் வசித்து வருபவர் நவீன்குமார். இவர் வாடகை கார் டிரைவர் ஆவார். நவீன்குமாரின் மனைவி பல்லவி. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பல்லவிக்கும், தொட்டபிதரஹள்ளுவை சேர்ந்த ஹிம்வந்த் குமார் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதுபற்றி அறிந்ததும் நவீன்குமார், பல்லவியை கண்டித்து உள்ளார்.

ஆனால் கள்ளக்காதலை கைவிடாத பல்லவி, நவீன்குமாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து அவர் ஹிம்வந்த் குமாரிடமும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நவீன்குமாரை கொலை செய்ய கூலிப்படையை சேர்ந்த ஹரீஷ், முகிலன் ஆகியோருக்கு ஹிம்வந்த் குமார் பணம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நவீன்குமாரை, ஹரீசும், முகிலனும் அழைத்து சென்று உள்ளனர்.

கள்ளக்காதலன் தற்கொலை

பின்னர் தமிழ்நாட்டில் வைத்து நவீன்குமாரின் தலையில் ஹரீசும், முகிலனும் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் நவீன்குமார் மயங்கி விழுந்தார். பின்னர் நவீன்குமார் உயிரிழந்து விட்டதாக நினைத்த ஹரீசும், முகிலனும் நவீன்குமார் ரத்தவெள்ளத்தில் கிடந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் ஹிம்வந்த் குமாருக்கு அனுப்பி உள்ளனர். இதற்கிடையே நவீன்குமார் குறித்து பல்லவியிடம் நவீன்குமாரின் சகோதரி வரலட்சுமி கேட்டு உள்ளார்.

ஆனால் அதற்கு பல்லவி சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பல்லவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹிம்வந்த் குமார் மீது வரலட்சுமி பீனியா போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் பல்லவியிடமும், ஹிம்வந்த் குமாரிடமும் போலீசார் விசாரித்தனர். போலீசார் தன்னிடம் விசாரித்ததால் பயத்தில் ஹிம்வந்த் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

கைது

இந்த நிலையில் நவீன்குமார் திடீரென தனது வீட்டிற்கு திரும்பி வந்து தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக போலீசாரிடம் கூறினார். மேலும் பல்லவி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். இதனால் பல்லவியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது நவீன்குமாரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்றதை பல்லவி ஒப்புக்கொண்டார். இதனால் பல்லவியை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் பல்லவியின் தாய் அம்மஜம்மா, கூலிப்படையை சேர்ந்த ஹரீஷ், முகிலன் ஆகியோரையும் கைது செய்தனர்.


Next Story