பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதிக்கு திடீர் நெஞ்சுவலி


பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதிக்கு திடீர் நெஞ்சுவலி
x

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிக்கமகளூரு;


முருக மடம்

சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த 2 மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீசார் கடந்த மாதம்(ஆகஸ்டு) 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி.-எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதுபோல் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் சித்ரதுர்கா மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

மடாதிபதி கைது

வழக்கு விசாரணையில் இருந்தாலும் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்படாமல் இருந்தார். இதனால் அவரை கைது செய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை சித்ரதுர்காவில் உள்ள மடத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொட்டும் மழையிலும் இந்த கைது நடவடிக்கை நடந்தது. பின்னர் அவர் ரகசிய இடத்தில் வைத்து போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது நடவடிக்கை குறித்து சித்ரதுர்காவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் பலாத்காரம்

மடத்தில் தங்கி படித்த உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 2 பேர் அளித்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட உடன் அவர் செல்லக்கெரேவில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வைத்து அதிகாலை 3 மணி வரை அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதையடுத்து அவரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினோம். நீதிபதி, மடாதிபதியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆனால் சிறையில் அடைப்பதற்குள் மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காலை 8 மணியளவில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவரை சிகிச்சைக்காக சித்ரதுர்கா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

விடுதி கண்காணிப்பாளர்

இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவ்வழக்கில் விடுதி வார்டன்(கண்காணிப்பாளர்) ரஷ்மி என்பவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள அனைவரையும் கைது செய்வோம்.

இதற்கிடையே வக்கீல்கள், ஏராளமான மடாதிபதிகள் கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் மடாதிபதிக்கு எதிரான திசையில் விசாரணை நடப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

இவ்வாறு செய்வதால் போலீசாரால் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் விசாரணையை மேற்கொள்ள இயலாது. மடாதிபதியின் உடல்நிலை சரியானதும் விசாரணை தொடரும். அவரை பெங்களூரு ஜெயதேவா ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

உண்மைகள் வெளிவரும்

மடாதிபதியின் உடல்நிலை சரியானதும் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்போம். பின்னர் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம். அப்போது இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




Next Story