எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது - சீனாவுக்கு இந்தியா கண்டனம்


எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது - சீனாவுக்கு இந்தியா கண்டனம்
x

கோப்புப்படம்

அதிக எண்ணிக்கையில் எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது என்று சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா-சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக சீன அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது இந்த கருத்தை நிராகரித்த அவர், எல்லையில் அதிக எண்ணிக்கையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது எனக்கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். வெளியுறவு மந்திரி கூட பேசினார். அதாவது, இருநாட்டு உறவில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும், இது ஏப்ரல் 2020 முதல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்' என்றார்.

மேலும் அவர், 'வெளியுறவு மந்திரி கூறியது போல, ஒப்பந்தங்களை மீறி எல்லையில் அதிக எண்ணிக்கையிலான படைகள் குவிப்பது ஒரு அசாதாரணம்' என்றும் கண்டனம் தெரிவித்தார். எல்லை பிரச்சினை தொடர்பாக தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அரிந்தம் பாக்சி, ஆனால் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்புவதைக் காணும் வரை, ஒட்டுமொத்த உறவில் இயல்பான நிலையை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story