நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளேன்: கெஜ்ரிவால் அறிவிப்பால் டெல்லி அரசியலில் பரபரப்பு


நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளேன்: கெஜ்ரிவால் அறிவிப்பால் டெல்லி அரசியலில் பரபரப்பு
x

அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறி வரும் கெஜ்ரிவால், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களும் உள்ளன.

தனிப்பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வந்தாலும் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாக ஆம் ஆத்மி அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது. அப்படித்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுவரை 5-முறை அனுப்பிய சம்மன்களுக்கு ஆஜராகவில்லை. 6-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை வரும் 19 ம் தேதி ஆஜராகுமாறு கூறியுள்ளது. இந்த நிலையில், டெல்லி சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நாளை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை தன்னை கைது செய்யலாம் என்று கெஜ்ரிவால் கூறி வரும் நிலையில் , நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்து இருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


Next Story