உள்நாட்டு போர்.. மியான்மரில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த 600 வீரர்கள்


உள்நாட்டு போர்.. மியான்மரில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த 600 வீரர்கள்
x
தினத்தந்தி 20 Jan 2024 8:17 AM GMT (Updated: 20 Jan 2024 8:38 AM GMT)

மியான்மர் வீரர்களை விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு மத்திய அரசை மிசோரம் அரசு வலியுறுத்தியுள்ளது.

கவுகாத்தி:

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே ராணுவத்துக்கும், ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினருக்குமிடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 இன சிறுபான்மை ஆயுதக்குழுவினர் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் சில நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் கைப்பற்றினர். இதனால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் தப்பி ஓடினர்.

இந்நிலையில், சண்டை தீவிரமடைந்ததால் மியான்மரில் இருந்து தப்பிய ராணுவ வீரர்கள் பலர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். மியான்மரின் ரக்கினே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை கிளர்ச்சிக்குழுவினர் கைப்பற்றியதால் இந்தியாவுக்கு தப்பி வந்த சுமார் 600 ராணுவ வீரர்கள், எல்லையோர மாநிலமான மிசோரமின் லாங்திலாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர்கள் அசாம் ரைபிள் படையினரின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீரர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மிசோரம் அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மர் வீரர்களை விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின்போது, மிசோரம் முதல்-மந்திரி லால்துஹோமா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இருவரும் இதுபற்றி அவசர பேச்சுவார்த்தை நடத்தினர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-மந்திரி லால்துஹோமா கூறியதாவது:-

மியான்மரில் இருந்து மக்கள் நம் நாட்டிற்கு தஞ்சம் தேடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவுகிறோம். வீரர்கள் தஞ்சம் தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்பு நாங்கள் அவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பினோம். சுமார் 450 ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story