அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி மிரட்டல்; உல்பா-ஐ அமைப்பு பதில் கடிதம்


அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி மிரட்டல்; உல்பா-ஐ அமைப்பு பதில் கடிதம்
x

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி மிரட்டல் விடுத்தது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என உல்பா-ஐ தீவிரவாத அமைப்பு கடிதத்தில் தெரிவித்து உள்ளது.

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு, காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னு என்பவர் பெயரில் வெளியான ஆடியோ பதிவு ஒன்று மிரட்டல் விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து ஹிமந்தாவின் போலீஸ் பாதுகாப்பு நேற்று முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆடியோ பதிவில், அசாமில் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களை உங்களுடைய அரசு துன்புறுத்தியும், சித்ரவதை செய்தும் வருகிறது. சிறையில் உள்ளவர்களையும் கொடுமைப்படுத்தி வருகிறது.

முதல்-மந்திரி சர்மா, கவனமுடன் கேளுங்கள். இந்திய அரசுக்கும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. உங்களுடைய அரசு சீக்கியர்களுக்கு எதிராக அவர்களை துன்புறுத்தியும், சித்ரவதை செய்தும் வரும் என்றால், அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என தெரிவித்து இருந்தது.

இதற்கு அசாமில் உள்ள உல்பா-ஐ எனப்படும் அசோம் ஒன்றுபட்ட விடுதலை முன்னணி - சுதந்திரம் என்ற அமைப்பின் தலைவரான பரேஷ் பருவா என்ற பரேஷ் அசோம் என்பவர் சீக்கியர்களுக்கு வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தாவுக்கு தொலைபேசி வழியே நீங்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது போன்று தோன்றுகிறது மற்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என நாங்கள் உணருகிறோம் என தெரிவித்து உள்ளார்.

காலிஸ்தான் மற்றும் வாரிஸ் டே பஞ்சாப்பின் உறுப்பினர்கள் 8 பேர் சமீபத்தில் பஞ்சாப்பில் இருந்து திப்ரூகார் சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், அவர்களை கொடூர சித்ரவரை செய்வதற்கு இடமில்லை.

அதுபோன்ற முரணான செய்தி எதனையும் நாங்கள் பார்க்கவில்லை. அது அசாமின் தோல்கிரி (உள்நாட்டு மக்கள்) மக்களின் நடைமுறையில் கிடையாது. சீக்கிய வரலாற்றை தோல்கிரி மக்கள் நன்றாக அறிவார்கள் என கடிதம் தெரிவிக்கின்றது.

இதுபற்றி நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என அசாம் டி.ஜி.பி.யான ஜி.பி. சிங் கூறியுள்ளார்.


Next Story