அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு


அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
x

Image Courtesy: AFP

அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கொட்டி வரும் கனமழையால் அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இதில், மிக மோசமாக நாகோன் மாவட்டத்தில் மட்டும், 3.50 லட்சம் பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மாநிலத்தில், 1,709 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 82 ஆயிரம் ஹெக்டரில் பயிர்கள் நாசமாகியுள்ளன. எட்டு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில், 19 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 91 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்து உள்ளன.

இந்த நிலையில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் ஒருவர பலியானார். இதனால் அங்கு கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பிரம்மபுத்ரா நதியின் கிளை நதிகளான கோப்பிலி, காம்பூர் ஆகியவற்றில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.


Next Story