அசாம்: கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்வு - 3.5 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திஸ்பூர்,
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மாதம் 25-ந்தேதி புயலாக உருமாறியது. 'ராமெல்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் இடையே 26-ந்தேதி இரவு கரையை கடந்தது.
புயலை தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் மேற்கு வங்காளத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனிடையே 'ராமெல்' புயல் காரணமாக மிசோரம், மணிப்பூர், அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக அசாம் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே போல் அசாமில் உள்ள கோபிலி, பாரக், கட்டாகால் மற்றும் குஷியாரா ஆகிய ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.