சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை பேச்சு: மராட்டிய கவர்னர் கோஷ்யாரியை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்


சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை பேச்சு: மராட்டிய கவர்னர் கோஷ்யாரியை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்
x

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நீக்க வலியுறுத்தியும், மாநில அரசை கண்டித்தும் மும்பையில் மகாவிகாஸ் அகாடி சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரண்டனர்.

மராட்டிய கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, சத்ரபதி சிவாஜி மன்னரை அந்த காலத்தின் அடையாளம் என கூறினார்.

பிரமாண்ட பேரணி

கவர்னரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பா.ஜனதா தவிர அனைத்து கட்சிகளும் கவர்னரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில் சத்ரபதி சிவாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், மராட்டியத்துக்கு வர இருந்த பெரிய நிறுவனங்கள் குஜராத்துக்கு சென்றது, கர்நாடக - மராட்டிய எல்லை பிரச்சினையில் மாநில அரசின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் ஏக்நாத் ஷிண்டே அரசை கண்டித்தும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி சார்பில் நேற்று மும்பையில் பிரமாண்ட கண்டன பேரணி மற்றும் பொது கூட்டம் நடந்தது.

உத்தவ் தாக்கரே குடும்பம் பங்கேற்பு

பைகுல்லா பகுதியில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் பேரணி தொடங்கியது. பேரணியில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு, உழவர், உழைப்பாளர் உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டனர்.

அந்த கட்சிகளின் தலைவர்களான சரத்பவார், உத்தவ் தாக்கரே, அஜித்வார், நானா படோலே ஆகியோர் பேரணியில் ஓரணியில் பங்கேற்றனர்.

மேலும் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் மகன்கள் ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே என அவரது குடும்பத்தினர் பேரணியில் கலந்து கொண்டனர்.

4 கி.மீ. நடந்த இந்த பேரணி சி.எஸ்.எம்.டி. டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடம் வரை நடந்தது.

கவர்னரை உடனடியாக நீக்க வேண்டும்

இதை தொடர்ந்து அந்த பகுதியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

சத்ரபதி சிவாஜி மற்றும் மகாத்மா புலே பற்றி அவதூறாக பேசிய கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். மகாவிகாஸ் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறு, வேறாக இருக்கலாம். ஆனால் மராட்டியத்தின் சுயமரியாதையை காக்க ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. கவர்னர் நீக்கப்படவில்லை எனில், நாங்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை வரும்.

மராட்டியத்தை மேம்படுத்த, வளர்ச்சி பெற வைக்க இல்லாமல், மாநிலத்தை களங்கப்படுத்து போட்டி நடக்கிறது. அம்பேத்கர், மகாத்மா புலே பள்ளிகளை தொடங்க பிச்சை எடுத்தனர் என மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கூறுகிறார். இதுபோன்ற அவதூறுகளை சகித்து கொள்ள முடியாது. அரசியல் சித்தாந்தங்களை தாண்டி மாநிலத்தின் பெருமையை பாதுகாக்க நாம் ஒன்றாக இருக்க வேண்டும். கவர்னரை நீக்கவில்லை எனில், அடுத்து செய்ய வேண்டியை திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னராகவே கருதுவதில்லை

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசுகையில், " எந்த ஒரு சித்தாந்தமும் அற்றது ஷிண்டே அரசு. சந்திரகாந்த் பாட்டீல் என்ற மந்திரி அம்பேத்கரும், புலேவும் பள்ளிகளை தொடங்க பிச்சை எடுத்தனர் என்கிறார். மற்றொரு மந்திரி மங்கல் பிரதாப் லோதா சத்ரபதி சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பித்ததை, ஏக்நாத் ஷிண்டேவின் துரோகத்துடன் ஒப்பிடுகிறார்.

நான் பகத்சிங் கோஷ்யாரியை கவர்னராகவே கருதுவதில்லை. கவர்னர் பதவி மரியாதைக்குரியது. கவர்னரை தேர்வு செய்ய தகுதிகள் வரையரை செய்யப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். மாநிலத்தின் சுயமரியாதை மற்றும் புகழுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. பெலகாவி, கார்வர், நிப்பானி மற்றும் சில கிராமங்கள் மராட்டியத்துடன் இணைக்கப்பட வேண்டும்" என்றார்.

ஷிண்டே அரசு கவிழும்

மாநில எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் பேசும் போது, " மராட்டியத்தை பாதுகாக்க இந்த அரசு அகற்றப்பட வேண்டும். தேசிய அடையாளம், தலைவர்களின் புகழை காக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு முன் வேறு மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என எந்த கிராமங்களும் வெளிப்படையாக கூறியதில்லை. தற்போது மட்டும் இது நடப்பது ஏன்?. மாநிலத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க மகாவிகாஸ் அகாடி மேற்கொண்ட முதல் நடவடிக்கை இது. விலைவாசி, வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தை அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது " என்றார்.

சிவசேனா உத்தவ் அணி எம்.பி. சஞ்சய் ராவத், " ஷிண்டே அரசு பிப்ரவரி மாதம் வரை கூட நீடிக்காது. ஷிண்டே அரசை கவிழ்ப்பதற்பான முதல் நடவடிக்கை இந்த பேரணி" என்றார். மகாவிகாஸ் அகாடி பேரணியையொட்டி நேற்று பைகுல்லா முதல் சி.எஸ்.எம்.டி வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த பேரணியில் சுமார் 70 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.


Next Story