சுள்ளியா அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகள் திருட்டு
சுள்ளியா அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றனர்.
மங்களூரு-
சுள்ளியா அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றனர்.
தங்க நகைகள் திருட்டு
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கனகமஜலு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், தொழில் அதிபர். நேற்று முன்தினம் இவர் உறவினர் வீட்டில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த சுரேஷ், பீரோவை சோதனை செய்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 240 கிராம் மதிப்பிலான தங்க நகைகள் திருடுபோயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து சுள்ளியா போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. திட்டமிட்டு நடந்திருப்பதால் தெரிந்த நபர்கள் யாரேனும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கடைகளில் திருட்டு
மேலும் இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல கனகமஜலுவை அடுத்த ஜால்சூர் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.2 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.
மேலும் வினோபாநகர் பகுதியில் சுந்தர் நாயக் என்பவரின் பெட்டிக்கடையின் கதவை உடைத்த மர்ம நபர்கள், வியாபாரத்திற்காக வைத்திருந்த பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து ஜோதி மற்றும் சுந்தர் நாயக் கொடுத்த புகாரின் பேரில் சுள்ளியா போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.