தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் மீது மர்மகும்பல் தாக்குதல்
மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா:
மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தனியார் நிறுவன ஊழியர் உள்பட 4 பேர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
விடுதியில் விருந்து
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா டவுன் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவிக்கு பிறந்தநாள் என கூறப்படுகிறது. இதற்காக அவர் துங்கா பகுதியில் உள்ள விடுதியை முன்பதிவு செய்து இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் விடுதியில் தனது மனைவியின் பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
இதில் அவர் தனது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அவரது நண்பர்களான நாகபவன், தேஜஸ் மற்றும் சேத்தன் ஆகியோர் விடுதிக்கு வந்து விருந்தில் கலந்து கொண்டனர். அவர்கள் விருந்து நடைபெறும் போது, மது அருந்திகொண்டு ஆடி மகிழ்ந்தனர்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். அந்த கும்பல் திடீரென அங்கு நின்று கொண்டிருந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. மேலும், அவர்களை கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றது. மர்மநபர்கள் தாக்கியதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்கள் 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 4 பேரும் துங்காநகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேமரா காட்சிகள்
மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனோஜுக்கு வேண்டாதவர்கள், முன்விரோதம் காரணமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், 7 பேர் கொண்ட மர்மகும்பலையும் வலைவீசி தேடி வருகின்றனர்.