இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடக்கிறது - பெல்ஜியத்தில் ராகுல் காந்தி பேச்சு


இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடக்கிறது - பெல்ஜியத்தில் ராகுல் காந்தி பேச்சு
x

Image Courtesy : @INCIndia twitter

தினத்தந்தி 9 Sept 2023 6:44 AM IST (Updated: 9 Sept 2023 12:19 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிரசல்ஸ்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முதலாவதாக பெல்ஜியம் சென்றுள்ள அவர், தலைநகர் பிரஸ்சல்சில் வாழும் இந்திய மக்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:-

"பெல்ஜியம் எம்.பி.க்கள் மற்றும் இந்தியர்களுடன் ஒரு இனிமையான கலந்துரையாடல் நடந்தது. இந்தியா-ஐரோப்பா இடையேயான உறவு, மாறிவரும் உலகம், இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள், மணிப்பூர் வன்முறை, பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம்.

இந்தியாவில் பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடக்கிறது. இது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மேலும் தலித் சமூகங்கள், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்ட சமூகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நாட்டின் தன்மையை மாற்ற முயற்சி நடக்கிறது.

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள், ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும், மக்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது காஷ்மீர் உள்பட இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பொதுவான விவாதம். சுமார் 4,000 கி.மீ. தொலைவுக்கு நான் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களுடைய சிக்கலான பிரச்சினைகளை அறிய முடிந்தது.

ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே அதில் யாரும் தலையிட உரிமை இல்லை."

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Next Story