காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டம்; 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுக்க முயற்சி- மத்திய அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
10 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அன்னபாக்ய திட்டம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். அதுபோல், அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதனுடன் சேர்த்து மேலும் 5 கிலோ அரிசி என ஒட்டு மொத்தமாக 10 கிலோ அரிசி வழங்குவோம் என்று அறிவித்தோம். கூடுதலாக வழங்கப்படும் 5 கிலோ அரிசிக்காக, மாதந்தோறும் 2 லட்சத்து 28 ஆயிரம் மெட்ரிக் டன் (ஒரு மெட்ரிக் டன் என்பது 1,000 கிலோ) அரிசி தேவையாகும். ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.34 ஆகும். இதனுடன் சேர்த்து 2 ரூபாய் 60 காசு போக்குவரத்துக்கு செலவாகும்.
ரூ.10 ஆயிரத்து 92 கோடி தேவை
அன்னபாக்ய திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.840 கோடி செலவாகும். ஒரு ஆண்டுக்கு அன்னபாக்ய திட்டத்தை அரசு நிறைவேற்ற ரூ.10 ஆயிரத்து 92 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது மாநில அரசு சார்பில் 5 கிலோ அரிசி வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் இல்லை. ஆனால் கூடுதலாக தேவைப்படும் 5 கிலோ அரிசியை மத்திய அரசிடம் இருந்து வாங்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது.
இதற்காக மத்திய உணவுத்துறைக்கு கர்நாடகம் சார்பில் கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 12-ந் தேதி கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஜூலை 1-ந் தேதியில் இருந்து அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்குவோம் என்றும், காங்கிரசின் 2-வது இலவச வாக்குறுதி திட்டத்தை நிறைவேற்றவும் அரசு தயாராக இருந்தது.
அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி
இந்த நிலையில், கர்நாடகத்தின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய பா.ஜனதா அரசு அரசியல் செய்ய தொடங்கி உள்ளது. முதலில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 425 மெட்ரிக் டன்அரிசி தருவதற்கு ஒப்புக் கொண்ட மத்திய அரசு தற்போது திடீரென்று, அரிசி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. அதாவது வெளிச்சந்தையில் அரிசி விற்பனைக்கு இல்லை என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்து, கர்நாடகத்திற்கு அரிசி தர மறுக்கிறது.
இதன்மூலம் கர்நாடகத்திற்கு அரிசி தரக்கூடாது என்ற முடிவை எடுத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது. அன்னபாக்ய இலவச அரிசி திட்டத்தின் கீழ் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதை தடுக்க பா.ஜனதா சதி செய்கிறது. அவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும், அதனை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். எப்படியாவது இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.
தெலுங்கானா முதல்-மந்திரியுடன்...
மத்திய அரசு அரிசி வழங்க மறுத்திருப்பதால் மற்ற மாநிலங்களிடம் இருந்து அரிசியை வாங்கி மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழ்நாடு அரசுடன் பேசி இருக்கிறோம். அவர்கள் 100 சதவீதம் அரிசி கொடுப்பது பற்றி உறுதியாக சொல்லவில்லை. நாளை (அதாவது இன்று) உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா தெலுங்கானா மாநிலத்திற்கு செல்ல உள்ளார்.
அங்கு முதல்-மந்திரி மற்றும் பிற மந்திரிகளை சந்தித்து அரிசி வழங்குவது குறித்து கே.எச்.முனியப்பா பேச இருக்கிறார். தெலுங்கானா அரசுடன் கே.எச்.முனியப்பா ஆலோசித்து விட்டு வந்த பின்பு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அன்னபாக்ய திட்டத்தின் கீழ் இலவச அரிசி கொடுப்பதற்கு நிதி பிரச்சினை எதுவும் இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கூட எந்த பிரச்சினையும் வந்ததில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.