அயோத்தி ராமர் கோவில்; இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் - பிரதமர் மோடி
இந்த வரலாற்று தருணம் இந்திய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மேலும் வளப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி(இன்று) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட புதிய கோவிலில், ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்ய நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில், அந்த புனிதமான வளாகத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தனித்துவமான நாகரீகத்தின் பயணம் முழுமையடையும் என்பதை நான் உணர்கிறேன்.
நமது தேசத்தின் மறுமலர்ச்சியில் ஒரு புதிய சுழற்சியின் தொடக்கத்தைக் காண இருக்கும் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே, உங்களின் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இந்த வரலாற்று தருணம் இந்திய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மேலும் வளப்படுத்தி, நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.