யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு: உத்தரபிரதேச முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில்


யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு: உத்தரபிரதேச முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில்
x

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மாநில முன்னாள் மந்திரி அசம்கானுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏராளமான வழக்குகள்

சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருப்பவர் அசம்கான். உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் இருந்து சுமார் 10 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மாநில மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். மேலும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் பிரதமர் மோடி மீதான அவதூறு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வெறுப்பு பேச்சு

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ராம்பூர் மாவட்ட நீதிபதி குறித்து அசம்கான் அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கி இருந்த அசம்கானின் இந்த வெறுப்பு பேச்சுகள் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

2 ஆண்டு சிறை

இதைத்தொடர்ந்து அவர் மீது ஷாஜர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் அவர் மீது ராம்பூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் அசம்கானுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி சோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சமாஜ்வாடி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story