தாஜ் மகாலை சுற்றி வணிக கடைகளுக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து வர்த்தகர்கள் போராட்டம்
தாஜ் மகாலை சுற்றி 500 மீட்டருக்கு வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்ரா,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ் மகாலில் இருந்து 500 மீட்டர் பரப்பளவுக்கு தள்ளி கடைகளை அமைத்திருக்கும் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், சுப்ரீம் கோர்ட்டின் முந்தின தீர்ப்புக்கு எதிராக, அதனை மீறும் வகையில் தாஜ் மகாலை சுற்றிய பகுதிகளில் சட்டவிரோத வர்த்தகங்கள் நடைபெறுகின்றன என சுட்டப்பட்டு இருந்தது.
இந்த பகுதியில், எந்தவித கட்டுமான பணிகளுக்கும் அனுமதி இல்லை. வாகன போக்குவரத்துக்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. நினைவு சின்னத்திற்கும், அதனை சுற்றியுள்ள பகுதிக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அருகே மரக்கட்டைகளை எரிக்கவும் தடை, நகராட்சியின் திட மற்றும் வேளாண் கழிவுகளை கொட்டவும் முழு பகுதியிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், தாஜ் மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் வர்த்தக எல்லாவற்றையும் நிறுத்தும்படியான நடவடிக்கைகளை எடுக்க ஆக்ரா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிடும்படி மனுவில் கேட்டு கொள்ளப்பட்டு இருந்தது. இதனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது.
இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தரவில், இந்திய அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, தாஜ் மகாலின் வெளிச்சுவர் மற்றும் எல்லை பகுதியில் இருந்து 500 மீட்டர் பரப்பளவில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நீக்க ஆக்ரா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவித்து இருந்தது.
இந்த உத்தரவால், 400-க்கும் கூடுதலான கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்படும். அவர்களின் வாழ்வு பாதிக்கப்படும் என கூறி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், கடைகளை அடைத்து விட்டு, எங்களுக்கும் குடும்பம் உண்டு. வாழ்க்கையை பறிக்காதீர்கள் என்ற போஸ்டர்களை வெளியே ஒட்டினர். இதன்பின்னர், சாலையை மறித்து நடந்து பேரணியாக சென்ற அவர்கள் மத்திய மந்திரி எஸ்.பி. சிங்கின் இல்லம் நோக்கி பயணித்தனர்.
கோர்ட்டின் உத்தரவு பற்றி ஆக்ரா வளர்ச்சி கழகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கும் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.