பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்


பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
x

பெங்களூருவில் ரசாயன கலவைகளால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.

பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெங்களூருவில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் துஷார் கிரிநாத் பேசியதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளை கரைக்க சாங்கி டேங்க், அல்சூர் ஏரி, எடியூர் ஏரி, ஹெப்பால் ஏரி உள்பட பல்வேறு ஏரிகளில் அனுமதி வழங்கப்படுகிறது. நகரின் சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க நடமாடும் சிலை கரைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சிலைகள் கரைக்கப்படும் ஏரிகளை சுற்றிலும் மரத்தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சிலைகள் கரைக்கப்படும் ஏரிகளில் நீச்சல் வீரர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், தெருவிளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த ஏரிகளில் சேரும் குப்பை கழிவுகளை அகற்றி அதை குப்பை கிடங்கிற்கு கொண்டு வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

சிலைகளை கரைக்க வசதியாக கிரேன்கள், படகுகள், மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும்போது பட்டாசு வெடிப்பது, வெடி பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரசாயன கலவைகளால் உருவாக்கப்படும் சிலைகள், தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் ஆப் பாரீஸ் போன்றவற்றால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள் மீது அபராதத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சிலைகளை வைப்பது, கரைப்பது, தூய்மையை பராமரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் அனுமதி கடிதத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். பேனர்கள் வைக்கவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏரிகள் அசுத்தமாவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். வண்ண விநாயகர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாறான பொருட்களில் உருவான சிலைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு துஷார் கிரிநாத் பேசினார்.


Next Story