பேப்பர் கப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு..!!


பேப்பர் கப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு..!!
x

கோப்புப்படம்

பேப்பர் கப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பது, விற்பது, வினியோகிப்பது, சேமித்து வைப்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

பேப்பர் கப்புகளில் மெழுகோ அல்லது பிளாஸ்டிக்கோ தடவப்படுவதால், பேப்பர் கப்புகளும் தடை பட்டியலில் சேர்ந்தன.

இந்த தடையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

விஞ்ஞான அடிப்படை

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அம்மனு, நீதிபதிகள் ரவீந்திர பட், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.

இவ்வழக்கில், நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. பொதுநலன் சார்ந்து முடிவு எடுத்துள்ளது. இந்த தடைக்கு விஞ்ஞானரீதியான அடிப்படை உள்ளது.

எனவே, தடைக்கு முகாந்திரம் உள்ளதா என்று நாங்கள் தலையிட எந்த காரணமும் இல்லை.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு

தடை விதிக்க காரணமான ஐ.ஐ.டி. அறிக்கையில், பேப்பர் கப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு தீங்காக அமையும் என்றும், நிறைய மரங்களை வெட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை மறுசுழற்சி செய்வது, காற்றுமாசை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுதாரரின் உரிமை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், மாசற்ற சுற்றுச்சூழலுக்கான பொதுமக்களின் உரிமை நியாயமானது. ஆகவே, இத்தடை செல்லும்.

அதே சமயத்தில், நெய்யப்படாத பைகள் மீதான தடையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story