விமான நிலைய ஊழியர்கள் மீது பெண் இசை கலைஞர் பரபரப்பு புகார்
விமான நிலைய ஊழியர்கள் மீது பெண் இசை கலைஞர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த பெண் இசை கலைஞர் ஒருவர் பெங்களூரு விமான நிலைய டுவிட்டர் கணக்கை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானம் மூலம் வெளியூருக்கு செல்வதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று இருந்தேன். அப்போது எனது உடைமைகளையும், சக பயணிகளின் உடைமைகளையும் விமான நிலைய ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் விமான நிலைய ஊழியர்கள் சோதனை என்ற பெயரில் சட்டையை கழற்றும்படி என்னை வற்புறுத்தினர்.
இது உண்மையிலேயே எனக்கு நடந்த அவமானகரமான செயல். சோதனையின் போது பெண்கள் எதற்காக சட்டையை கழற்ற வேண்டும்?. விமான நிலைய ஊழியர்களின் இந்த நடத்தையால் நான் சோர்ந்து போய் உள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த டுவிட்டை பார்த்த பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்த செயல் நடந்திருக்க கூடாது என்று கூறியுள்ள விமான நிலைய அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். விமான நிலைய ஊழியர்கள் மீது புகார் கூறியுள்ள பெண் இசை கலைஞர் எந்த தேதியில் பயணம் செய்தார் என்ற விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.