இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினருக்கு தண்டனை விதிப்பு
பெங்களூருவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஆண்டு மே மாதம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெங்களூருவில் வசித்து வந்த வங்காளதேசத்தினர் 11 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில், பெங்களூருவில் வங்காளதேச பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வங்காளதேசத்தினர் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒரு குற்றவாளிக்கு 20 ஆண்டும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த குற்றத்திற்காக மேலும் 2 பேருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.