அனைத்து பாடத்திட்டங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்ய நிதி ஒதுக்கீடு; சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


அனைத்து பாடத்திட்டங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்ய நிதி ஒதுக்கீடு; சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

அனைத்து பாடத்திட்டங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

அனைத்து பாடத்திட்டங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பா.ஜனதா ஆட்சி

கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு சட்டசபைக்கு சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை நேற்று மீண்டும் விதான சவுதாவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-

கவர்னர் தனது உரையில் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். அதன் மீது விவாதம் நடைபெற்றது. கவர்னர் உண்மையை மட்டுமே கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கட்சியின் முழுமையான ஆட்சி நடத்தவில்லை. முதல் 1½ ஆண்டுகள் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.

வணிகம் முடங்கியது

எடியூரப்பா பதவி ஏற்றதும் வட கர்நாடகத்தில பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதில் இருந்து வெளியே வந்ததும் கொரோனா பரவல் தொடங்கியது. 1½ ஆண்டுகள் அவற்றை கட்டுப்படுத்துவதில் நேரம் போனது. அப்போது முதலில் மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. உலகம் முழுவதும் இந்த நிலை இருந்தது. பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன.

வணிகம் முடங்கியது. போக்குவரத்து இயங்கவில்லை. சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக நின்றுபோனது. மனிதர்களின் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் முழுவதுமாக நின்றுவிட்டன. இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தன. சுகாதாரத்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக 2020-21-ம் ஆண்டில் ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. சவால்களுக்கு மத்தியில் நான் முதல்-மந்திரி பதவிக்கு வந்தேன். கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தாமல் வழங்கினோம். நிலைமை சீரானதும், பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினோம்.

புதிய கல்வி கொள்கை

உயர்கல்வித்துறையில் படிக்கும் மாணவர்கள் 2 டிகிரி பெறும் வகையில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. என்ஜினீயரிங் படிப்பை கன்னடத்தில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடத்திட்டங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன்.

புதிதாக 7 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் கல்லூரி கல்வி வரை இலவச கல்வி வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

பொது கழிவறைகள்

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா குறுக்கிட்டு பேசும்போது, "கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பொது கழிவறைகளால் பயன் இல்லை. அங்கு தண்ணீர் இருப்பது இல்லை. அதனால் பொது கழிவறைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும். வீடுகளுக்கு தனி நபர் கழிவறை அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதனால் பொது கழிவறைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர் பேசும்போது, "கல்விக்கடன் வழங்க நிலம் உள்ளிட்ட சொத்துகளை வங்கி அதிகாரிகள் கேட்கிறார்கள். இதனால் கல்வி கடன் கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை சரி ெசய்ய வேண்டும். கல்வி கடன் மீதான வட்டியை குறைக்க வேண்டும். முடிந்தால் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் பேச வேண்டும் என்றார்.

சபாநாயகர் அதிருப்தி

சபாநாயகர் காகேரி கூட்டம் தொடங்கும்போது கூறுகையில், "சட்டசபை காலை 10.30 மணிக்கு கூடி இருக்க வேண்டும். ஆனால் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராததால், இந்த சபை 55 நிமிடங்கள் தாமதமாக 11.25 மணிக்கு தொடங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் வருவதால் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் இந்த பொறுப்பை கவனிக்க வேண்டும். மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து இந்த சபைக்கு அனுப்பியுள்ளார்கள். அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அதனால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் ஆஜராக வேண்டும்" என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

10 ஆயிரம் முஸ்லிம் பெண்கள் நின்றுவிட்டனர்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்க் கார்கே, "10 ஆயிரம் முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டதாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதற்கு சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்கள் (ஹிஜாப் விவகாரம்) காரணம் ஆகும்" என்றார். இதற்கு பதிலளித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அவ்வாறு எந்த புள்ளி விவரமும் தனக்கு வரவில்லை என்றும், பள்ளி-கல்லூரிகளுக்கு முஸ்லிம் பெண்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.


Next Story