கர்நாடகத்தில் பெண் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு
மாநில வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாகவும், பெண் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரு:
மாநில வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாகவும், பெண் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பட்ஜெட் குறித்து விவாதம்
2023-24-ம் நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை கடந்த 17-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், பெண்களுக்கான இலவச பஸ் பாஸ், பெண் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசி விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-
16 சதவீதம் அதிகம்
கர்நாடக மாநிலத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் இருக்கிறது. 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.14,699 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால் ஜனவரி மாதத்தில் ரூ.5,996 கோடி மட்டுமே பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது.
வருவாய் அதிகரிப்பு, பொருளாதாரம் மேம்பாடு காரணமாக ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 182 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். கடந்த பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகமாகும்.
ரூ.67 ஆயிரம் கோடி கடன்...
பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மாநிலத்தின் நிதி நிலைமை, செலவுகளை கணக்கிட்டும், பொருளாதார மேம்பாடு, மாநில வளர்ச்சி உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டும் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். மத்திய அரசின் வரி வருவாயில், மாநில அரசின் பங்கு ரூ.37,252 கோடி ஆகும். மத்திய அரசிடம் இருந்து வரும் நிதியும் அதிகரித்துள்ளது. 2023-24-ம் ஆண்டில் ரூ.402 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.
இதுபோன்ற காரணங்களால் இந்த முறை பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கடன் தொகை ரூ.67 ஆயிரம் கோடிக்கு மிகாமல் பார்த்து கொள்ளப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட கடன்களும் முதலீடாகவே உள்ளது.
ரூ.1.30 லட்சம் கோடி கடன்
மாநிலத்தின் 65 ஆண்டுகளாக வரலாற்றில் ஒட்டுமொத்தமாக ரூ.1.30 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு இருக்கலாம். ஆனால் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டுமே ரூ.1.30 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு இருந்தது. சித்தராமையா ஆட்சியில் 82.3 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கப்பட்டு இருந்தது.
என்னுடைய ஆட்சி காலத்தில் 71 சதவீத கடன் மட்டுமே வாங்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊக்கத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு
மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும் போது, 'கடந்த 17-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெண் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். அந்த ஊக்கத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.
பா.ஜனதா அரசு பெண்கள் கல்வி கற்கவும் முக்கியத்தும் அளித்து வருகிறது. இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. வரை பெண்கள் இலவசமாக கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன்படி டிகிரி வரை பெண்கள் இலவசமாக கல்வி கற்கலாம். விவசாயிகளின் நலன் கருதி யசஷ்வினி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் வழங்கப்பட்ட கடனும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது', என்றார்.