பெங்களூரு மாநகராட்சி, பி.டி.ஏ. சொத்துகள் பாதுகாக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


பெங்களூரு மாநகராட்சி, பி.டி.ஏ. சொத்துகள் பாதுகாக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

பெங்களூரு மாநகராட்சி மற்றும் பி.டி.ஏ. சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேல்-சபையில் உறுதி அளித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி மற்றும் பி.டி.ஏ. சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேல்-சபையில் உறுதி அளித்துள்ளார்.

கையகப்படுத்த நிலத்திற்கு பிரச்சினை

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்று வருகிறது. நேற்று மேல்-சபையில் கூட்டம் நடந்த போது உறுப்பினர் மரி திப்பேகவுடா எழுந்து பேசும்போது, பெங்களூரு தெற்கு தாலுகா பேகூரு அருகே தேவரசிக்கனஹள்ளியில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு தனது கவனத்தை செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்றார்.

உறுப்பினர் மரி திப்பேகவுடாவின் பேச்சுக்கு பதிலளித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பாதுகாக்கப்படும்

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு (பி.டி.ஏ.) என்று தனியாக விதிமுறைகள் இருக்கிறது. விதிமுறைகள் 6.1-ன் படி நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்பு, அதனை கைவிடுவதற்கு சாத்தியமில்லை. அதே நேரத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் இழப்பீடு குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சில வழக்குகளில் அரசுக்கு ஆதரவாகவும், சில வழக்குகளில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வந்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ.) சொத்துகள் பாதுகாக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநகராட்சி, பி.டி.ஏ. சொத்துகளை ஒரே நேரத்தில் பாதுகாக்கவும், கையகப்படுத்துவதற்கும் ஒரே விதிமுறைகள் கொண்டு வரப்படும்.

சரியான வாதங்கள் வைக்கப்படும்

மாநகராட்சி, பி.டி.ஏ. சொத்துகளை பாதுகாக்கும் விவகாரத்தில் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் அரசு தரப்பில் சரியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகிறது. வரும் நாட்களில் அரசு சொத்துகள் தொடர்பாக கோர்ட்டுகளில் நடைபெறும் வழக்குகளில் சரியான ஆவணங்கள் மற்றும் வாதங்கள் வைக்கப்படும்.

தேவரசிக்கனஹள்ளியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 50 வீட்டுமனைகள் விற்பனையாகி இருக்கிறது. இன்னும் 7 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டு தீர்ப்பு படி மீதம் இருக்கும் வீட்டுமனைகளை விற்பனை செய்ய சட்டப்படியான நடவடிககை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story