காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பணி நியமன முறைகேடு ஆவணங்களை ராகுல் காந்திக்கு அனுப்பி வைப்பேன்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகள் குறித்த ஆவணங்களை ராகுல் காந்திக்கு அனுப்பி வைப்பேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகள் குறித்த ஆவணங்களை ராகுல் காந்திக்கு அனுப்பி வைப்பேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அரசு வேலை
பீதர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப என்ற பெயரில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
பல்லாரியில் பாதயாத்திரை மேற்கொண்டபோது ராகுல் காந்தி, தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து இருப்பதில் காங்கிரசின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் அரசு வேலை கிடைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்த ஆவணங்களை அவருக்கு அனுப்பி வைப்பேன்.
பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்
காங்கிரஸ் ஆட்சியில் விண்ணப்பிக்காதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் ஐ.பி.எஸ். அதிகாரியையே கைது செய்துள்ளோம். இதில் தவறு செய்த யாரையும் நாங்கள் விடவில்லை. ஒருவேளை சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்திருந்தால், கூடுதல் டி.ஜி.பி. கைது செய்யப்பட்டு இருப்பாரா?. பசவகல்யாண் மேம்பாட்டிற்கு ரூ.500 கோடியும், பீதர், கலபுரகி கோட்டைகளை சீரமைக்க ரூ.20 கோடியும் ஒதுக்கியுள்ளோம்.
நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள். காங்கிரஸ் தோல்வியை தழுவும். ஆட்சியை பிடித்துவிடலாம் என்று காங்கிரசார் கனவு காண்கிறார்கள். இது சாத்தியமில்லை. கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.