பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல்


பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல்
x

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து மாநகராட்சி அதிகாரிகள் பேசி முடிவு எடுக்க உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து மாநகராட்சி அதிகாரிகள் பேசி முடிவு எடுக்க உள்ளனர்.

3-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

கர்நாடகத்தில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 17-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்திருந்தார். பெங்களூருவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். மாநகராட்சியின் நிதித்துறை சிறப்பு கமிஷனராக இருந்து வரும் ஜெயராம் ராயபுரா பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.

கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் ஆன்லைன் மூலமாகவே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதுபோல், இந்த நிதி ஆண்டும் ஆன்லைன் மூலமாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

முதல்-மந்திரியுடன் சந்திப்பு

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியும் கேட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கேட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாநகராட்சி அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளனர். ஏற்கனவே பெங்களூரு மாநகராட்சி நிதி பற்றாக்குறையில் சிக்கி தவித்து வருகிறது. சொத்து வரி, விளம்பரம் உள்ளிட்டவற்றின் மூலமாக மாநகராட்சிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.

அதே நேரத்தில் பெங்களூருவில் 11 புதிய மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் மட்டும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்திரா உணவகத்திற்கு நிதி ஒதுக்குவது, சாலை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Next Story