ஒடிசா: அரசு அலுவலகத்தில் புகையிலை மென்று துப்பி அசுத்தப்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பு
பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மென்று துப்பி அலுவலகம் முழுவதும் அசுத்தப்படுத்தியுள்ளனர்.
பாட்னா,
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் கொரி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு வரும் பொதுமக்களில் சிலர் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மென்று துப்பியும், அலுவலக சுற்றுச்சுவரில் சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்தி வந்தனர்.
இது தொடர்பாக எச்சரிக்கை கொடுத்தும், அலுவலகத்தை அசுத்தப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொரி பகுதி ஊரக வளர்ச்சிதுறை அலுவலகத்திற்கு அதிகாரி ராஜன் குமார் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு குட்கா, பான் மசாலா, புகையிலை மென்று அலுவலகத்தில் துப்பியும், அலுவலக சுவற்றில் சிறுநீர் கழித்தும் அசுத்தம் செய்த 12 பேருக்கு அபராதம் விதித்தார். 12 பேரிடமிருந்து மொத்தம் 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.