மேட்ரிமோனி ஆப்பில் அழகான பெண், காதல், திருமணம்... அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி


மேட்ரிமோனி ஆப்பில் அழகான பெண், காதல், திருமணம்... அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி
x

குஜராத்தில் மேட்ரிமோனி ஆப்பில் அழகான பெண்ணை பார்த்ததும் காதல் கொண்டு, திருமணம் செய்த நபருக்கு அடுத்து பேரதிர்ச்சி காத்திருந்தது.



ஆமதாபாத்,


குஜராத்தின் போர்பந்தர் நகரில் வசிப்பவர் விமல் காரியா. மேட்ரிமோனி செயலி ஒன்றில் பெண் ஒருவரை சந்தித்து உள்ளார். பார்த்ததும் அவர் மீது விமலுக்கு காதல் பிறந்து உள்ளது. அசாமின் கவுகாத்தி நகரை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ரீட்டா தாஸ் என தெரிய வந்தது.

இதன்பின் நாளாக நாளாக, இவர்கள் பேசி, தகவல் பரிமாறி கொண்டு, பின்னர் திருமணம் செய்வது என முடிவானது. ஆனால், ரீட்டாவின் முகப்பு பக்கத்தில், முன்பு ஒரு முறை விவாகரத்து பெற்றவர் என்ற தகவல் இருந்து உள்ளது.

அதனால், விவாகரத்து பெற்ற ஆவணங்களை ரீட்டாவிடம் விமல் கேட்டு உள்ளார். அப்போது, ஏதோ கூறி ரீட்டா திசை திருப்பி விட்டார். தனக்கு பஞ்சாயத்தில் வைத்து முன்பொரு முறை திருமணம் நடந்தது. அதனால், திருமண சான்றிதழ் இல்லை என கூறியுள்ளார். விமலும் அதனை நம்பி விடுவது என முடிவெடுத்து விட்டார்.

அதன்பின் தடபுடலான திருமணத்திற்கு திட்டமிட்டு உள்ளார். ஆமதாபாத்தில் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. முதல் 6 மாதங்கள் நன்றாக சென்று உள்ளது.

திடீரென ஒரு நாள் அசாமில் தனது தாயாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. நில விவகாரம் ஒன்றை தீர்க்க போக வேண்டும் என கூறியுள்ளார். விமலும் இதனை பெரிய விசயம் என எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டார்.

போனவர் திரும்பி வரவேயில்லை. அதன்பின் ரீட்டாவின் வழக்கறிஞரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது. அதில் பேசிய வழக்கறிஞர், ரீட்டாவுக்கு எதிராக வழக்கு ஒன்று உள்ளது. ரூ.1 லட்சம் செலவாகும். கவலைப்பட ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.

நில விவகாரத்தில் போலீஸ் காவலில் ரீட்டா இருக்க கூடும் என நினைத்து, அவரது வங்கி கணக்கிற்கு விமல் ஜாமீன் பணம் அனுப்பி உள்ளார். பணம் அனுப்பியதற்காக, ஆன்லைன் வழியே கோர்ட்டு ஆவணங்கள் விமலுக்கு கிடைத்து உள்ளது.

அதில், ரீட்டாவின் உண்மையான பெயர் ரீட்டா தாஸ் அல்ல. ரீட்டா சவுகான் என இருந்துள்ளது. அவர் மீது மோசடி, திருட்டு, கொலை மற்றும் வனவிலங்கு வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்து உள்ளன.

அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை அசாம் கோர்ட்டு பிறப்பித்து உள்ளது. அதில் இருந்து தப்பிக்கவே ரீட்டா சுற்றி திரிந்து வருகிறார்.

அவரை பற்றி கூகுளில் தேடியதில், ஆயுத கடத்தல், திருட்டு, கொள்ளை சம்பவம் மற்றும் காண்டாமிருகம் வேட்டையாடுதல் போன்ற சம்பவங்களில் ரீட்டா ஈடுபட்டதும், அவர் அனில் சவுகானின் மனைவி என்பதும் தெரிய வந்தது.

ரீட்டா கூறிய விசயங்களாக பத்திரிகையில் வெளிவந்த செய்தியில், அனிலுடன் 2007-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கார் திருட்டு வழக்குகள் 2015-ல் பதிவாகின. அதன்பின்னர், அனிலுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அனில் தற்போது சிறையில் இருக்கிறார் என கூறிய தகவல் வெளிவந்து உள்ளது.

இந்த அனில் சவுகான் என்பவர், டெல்லி கான்பூர் பகுதியில் சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளியாக இருந்து வந்து உள்ளார். அவருக்கு வயது 52. கடந்த 1995-ம் ஆண்டு முதல் அவர் கார்களை திருட தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கார்களை திருடி, விற்று லாபம் சேர்த்துள்ளார். அதன்பின்னர், இதனை ஒரு தொழிலாகவே ஆக்கி கொண்டார். இந்த காலகட்டத்தில் அவரது பேவரைட் காராக மாருதி 800 ரக கார் இருந்துள்ளது. இந்த வகை கார்களையே அதிக அளவில் திருடி விற்றுள்ளார்.

சில சமயங்களில் திருட்டில் ஈடுபடும்போது, கார் ஓட்டுனர்களை படுகொலையும் செய்துள்ளார். இப்படி திருடிய கார்களை நேபாளம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நல்ல விலைக்கு விற்றுள்ளார். அந்த தொகையை கொண்டு டெல்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரிய, பெரிய சொத்துகளை வாங்கி குவித்து உள்ளார்.

27 ஆண்டுகளாக இந்த கார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு சலிப்படைந்த அனில், இறுதியாக அசாமுக்கு சென்று தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இவருக்கு எதிராக அமலாக்க துறை பணமோசடி வழக்கு ஒன்றையும் பதிவு செய்து உள்ளது என்றால் இவரை பற்றி கூற வேண்டியதில்லை.

போலீசார் இவரை பல முறை கைது செய்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடன் கைது செய்யப்பட்ட அனில், 5 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின்பு 2020-ம் ஆண்டில் விடுதலையானார். சமீப காலங்களாக அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களை கடத்தி சென்று, அவற்றை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு விற்று வந்துள்ளார். அனிலுக்கு எதிராக 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கிடைத்த உளவு தகவலை அடிப்படையாக கொண்டு, தேசபந்து குப்தா சாலையில் வைத்து மத்திய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் அவரை பிடித்தனர். நாட்டின் மிக பெரிய கார் திருடன் என அனிலை போலீசார் கூறுகின்றனர்.

அனிலுக்கு 3 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். அசாமில் தங்கிய அவர், அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்துள்ளார். இதற்காக, உள்ளூர் தலைவர்கள் சிலருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளார். அனிலிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்த 3 மனைவிகளில் ஒருவராக ரீட்டா சவுகான் இருந்து உள்ளார். இந்த தகவலை அறிந்த விமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அவருக்காக தனது வாழ்க்கையின் பிற்பகுதியை வாழலாம் என் நினைத்து காத்திருந்தவருக்கு பேரதிர்ச்சியே காத்திருந்து உள்ளது. இதனை தொடர்ந்து இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுபடுவதற்கான முயற்சியில் விமலும், ரீட்டாவும் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story