பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை


பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை
x

பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விமான சேவை தொடங்க உள்ளது. முதல் விமானம் கலபுரகிக்கு புறப்பட்டு செல்கிறது.

2-வது முனையம்

பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த விமான நிலையம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கை, விமானங்கள் வருகை-புறப்பாடு மற்றும் சரக்குகளை கையாளுவதில் பெங்களூரு விமான நிலையம் நாட்டின் 3-வது பெரிய விமான நிலையமாக உள்ளது.

இந்த நிலையில் பயணிகள் மற்றும் விமானங்கள் வந்து செல்வதில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அதிநவீன 2-வது முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. 90 கவுண்ட்டர்களுடன் செயல்பட உள்ள இந்த முனையம் பெங்களூருவில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. பசுமை முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விமான முனையத்தை பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி திறந்துவைத்தார்.

2-வது முனையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி பசுமை தோட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்மேற்கூரையில் அலங்கார பூந்தொட்டிகளும் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

இன்று முதல் சேவை

இந்த நிலையில் சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து ஜனவரி 15-ந் தேதி (அதாவது இன்று) விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2-வது முனையத்தில் இருந்து விமானங்கள் இயங்க உள்ளன.

இந்த புதிய முனையத்தில் இருந்து கலபுரகிக்கு முதல் விமானம் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி 2-வது முனையத்தில் பயணிகளை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதிய முனையத்திற்கு செல்ல பயணிகள் ஆர்வத்துடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story