பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்; அறுவை சிகிச்சைக்கு நேரமானதால் 3 கி.மீ ஓடிச் சென்ற மருத்துவர்! வைரலாகும் வீடியோ


பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்; அறுவை சிகிச்சைக்கு நேரமானதால் 3 கி.மீ ஓடிச் சென்ற மருத்துவர்! வைரலாகும் வீடியோ
x

அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ஒருவர் 3 கிலோ மீட்டர் ஓடிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு,

அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ஒருவர், ஒரே மூச்சில் 3 கிலோ மீட்டர் ஓடிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். தினமும் அவர் கன்னிங்காம் சாலையில் இருந்து சர்ஜாபூர் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். மருத்துவர் நந்தகுமார் கடந்த 18 ஆண்டுகளாக ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.

ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த மழையால் போக்குவரத்து பிரச்னை கடுமையாக இருந்தது. அதனால் 3 கி.மீ., வரை நெரிசல் ஏற்பட்டது.மருத்துவமனைக்குச் செல்ல 1 மணி நேரத்திற்கும் மேலாகியது. லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை நேரம் அதே நாளில் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் மருத்துவர் கோவிந்த் போக்குவரத்து நெரிசலில் இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி மருத்துவமனைக்கு சென்றார்.சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மருத்துவர் கோவிந்த் மற்ற மருத்துவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார். மருத்துவர் கோவிந்த் ஓடி வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதைப் பற்றிப் பேசிய டாக்டர். கோவிந்த் நந்தகுமார், "நான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டேன். அறுவை சிகிச்சைக்கு மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் பயப்பட ஆரம்பித்தேன்.

கூகுள் மேப் நிறுவப்பட்டிருந்தாலும், காரில் செல்ல 45 நிமிடங்கள் ஆகும் என்று காட்டியது. அதனால் ஓடி மருத்துவமனையை அடைந்தேன். மேலும், தொடர்ந்து ஜிம் சென்று வந்ததால் ஓட்டம் எளிதாகிவிட்டது.

இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலத்திலும் அறுவை சிகிச்சைக்காக காரை விட்டு வந்துள்ளேன். சில சமயங்களில் நடந்தே ரெயில் பாதையை கடந்து செல்வேன்" என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அதில் "சில நேரங்களில் வேலைக்கு ஓடி செல்வது நல்லது!" என்று பதிவிட்டு கர்நாடக முதல்-மந்திரி உட்பட பலரை டேக் செய்துள்ளார். இதுவரை அவர் 1,000க்கும் மேற்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவர் நந்தகுமாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. அதேவேளையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பற்றி மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.


Next Story