போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க பெங்களூருவில் பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்ற பரிசீலனை: அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க பெங்களூருவில் பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்ற பரிசீலனை: அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க பள்ளிகள், தொழிற்சாலைகள் திறக்கும் நேரம் குறித்து பரிசீலனை நடத்தும்படி அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு பல்லாரி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பல்லாரி ரோட்டை விரிவுப்படுத்துவது குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் சாதகஹள்ளி கேட் முதல் ஹெப்பால் மேம்பாலம் வரை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

அரசின் பிரமாண பத்திரத்தை கோர்ட்டு பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பெங்களூரு போக்குவரத்து நெரிசல் விவகாரம் குறித்து நீதிபதிகள் கூறுகையில், பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து பள்ளிகள், தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம், என்றார்கள்.

பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை நடத்த வேண்டும்.

அதுபோல், தொழிற்சாலைகள் திறக்கும் நேரத்தை மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலனை நடத்தினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கலாம் என்று தலைமை நீதிபதி பி.பி.வரலே தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு வழங்கிய சிபாரிசுள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி 6 வாரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை 6 வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Next Story