கர்நாடகத்தில் 2-வது நாளாக நடைபயணம்: கனமழையால் தாமதமாக தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை


கர்நாடகத்தில் 2-வது நாளாக நடைபயணம்: கனமழையால் தாமதமாக தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை
x

கர்நாடகத்தில் 2-வது நாளாக நேற்று கொட்டும் மழையிலும் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

பாரத் ஜோடோ பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்றது.

ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் காலை கர்நாடகத்திற்குள் நுழைந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் மாலை பேகூரில் பாதயாத்திரையை நிறைவு செய்து அங்கு ராகுல்காந்தி தங்கி ஓய்வெடுத்தார்.

கனமழையால் தாமதம்

இந்த நிலையில், கர்நாடகத்தில் 2-வது நாளாக நேற்று காலை பேகூரில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். அவர் தினமும் காலை 6.30 மணிக்கு பாதயாத்திரையை தொடங்குவது வழக்கம். ஆனால், நேற்று பேகூர் பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் பாதயாத்திரையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

45 நிமிடங்களுக்கு பிறகு மழை நின்றதும் காலை 7.15 மணிக்கு ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். அப்போதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் ராகுல்காந்தி நடந்து சென்றார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சித்தராமையாவின் மகனும், வருணா தொகுதி எம்.எல்.ஏ.வுமான யதீந்திரா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டு நடந்து சென்றனர்.

நஞ்சன்கூடுவில் ஓய்வு

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பேகூரில் தொடங்கிய இந்த பாதயாத்திரை காலை 10 மணி அளவில் மைசூரு மாவட்டத்துக்குள் வந்தது. பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். இரவு 7 மணிக்கு அவர் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுராவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டார். அங்கு தங்கும் ராகுல்காந்தி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கிருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.

முன்னதாக இன்று காந்தி ஜெயந்தி என்பதால், அவர் காலையில் நஞ்சன்கூடு அருகே உள்ள பதனவாலு கிராமத்தில் உள்ள காதி கிராம நெசவாளர் மையத்துக்கு செல்கிறார்.


Next Story