ரெயில்களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், பெட்ஷீட்டுகள் திருட்டு


ரெயில்களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், பெட்ஷீட்டுகள் திருட்டு
x

இரவு நேரத்தில் ரெயிலில் இருந்து இறங்கும் பயணிகள், பெட்ஷ்ட், போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட பொருட்களை எளிதாக எடுத்துச் சென்றுவிடுகிறார்களாம்.

போபால்:

இந்தியன் ரெயில்வேயின் விரைவு ரெயில்களில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு பெட்ஷீட்டுகள், போர்வைகள், தலையணைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பயணிகள் அதனை பயன்படுத்தியபின் அப்படியே விட்டுச் செல்ல வேண்டும். குளிர்சாதன பெட்டிகளின் உதவியாளர்கள், அவற்றை சேகரித்து வைப்பார்கள். பின்னர் அவை வாஷ் செய்யப்பட்டு அடுத்து பயணிக்கக்கூடிய பயணிகளுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் சில பயணிகள் அந்த துணிகளையும் திருடிச் சென்றுவிடுகிறார்கள்.

குறிப்பாக இரவு நேரத்தில், உதவியாளர்கள் அயர்ந்து தூங்கும் சமயத்தில் இந்த திருட்டு நடக்கிறது. இந்த நேரங்களில் ரெயிலில் இருந்து இறங்கும் பயணிகள், பெட்ஷ்ட், போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட பொருட்களை எளிதாக எடுத்துச் சென்றுவிடுகிறார்களாம்.

சில சமயங்களில் பயணிகள் இறங்கியதும் உதவியாளர்கள் அந்த துணிகளை சேகரிப்பதற்கு முன்பாக, திருடர்கள் கைவரிசை காட்டிவிடுகிறார்கள். சில சமயம், துணிகளை எடுத்துச் செல்ல அந்த ஏசி பெட்டியின் உதவியாளர்களே உதவி செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அவ்வகையில், மத்திய பிரதேசத்தில் இயக்கப்படும் ரெயில்களில் அதிக அளவில் திருட்டு நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.4 லட்சம் மதிப்பிலான போர்வைகள், பெட்ஷீட்டுகள், தலையணைகள் திருடப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் போபால் விரைவு ரெயிலில்தான் அதிகம் நிகழ்வதாக கூறுகின்றனர். சில ரெயில்களில் உள்ள கழிவறைகளில் உள்ள குழாய்களும் திருட்டு போயிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story