ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவா? கட்சியில் இருந்து 400 பேர் திடீர் விலகல்


ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவா? கட்சியில் இருந்து 400 பேர் திடீர் விலகல்
x
தினத்தந்தி 13 April 2024 1:01 PM IST (Updated: 13 April 2024 2:21 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் பெனிவால் அளித்த புகாரின் அடிப்படையில் 3 காங்கிரஸ் தலைவர்களை 6 ஆண்டுகளுக்கு அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய லோக்தந்திரிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதன்படி காங்கிரஸ் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 2 தொகுதிகளில் அனுமன் பெனிவால் தலைமையிலான ராஷ்டிரிய லோக்தந்திரிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சி ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து, ஜாட் இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் நாகவுர் தொகுதியில் ராஷ்டிரியா லோக்தந்திரிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அனுமன் பெனிவால் போட்டியிடுகிறார். இதற்கிடையே நாகவுர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஜோதி மிர்தாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் பிரசாரம் மேற்கொள்வதாக அனுமன் பெனிவால் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றச்சாட்டப்பட்ட 3 பேரை காங்கிரஸ் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்தது.

இதில் இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ பரராம், குசேரா நகராட்சி தலைவர் தேஜ்பால் மிர்தா மற்றும் சுகரம் தோத்வாடியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, நாகவுரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சஸ்பெண்டை எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் 3 பேரும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் கிட்டத்தட்ட 400 கட்சி தொண்டர்கள் இன்று காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தேஜ்பால் மிர்தா கூறுகையில், "நாகவுரில் காங்கிரசை அழிக்க முயற்சிப்பவர் அனுமன் பெனிவால். அப்படிப்பட்ட ஒருவருடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனால்தான் நாங்கள் அனைவரும் கூட்டு ராஜினாமா கடிதம் கொடுக்கிறோம்" என்றார்.


Next Story