'அக்னிபத்' போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிய பள்ளி வாகனம்; பயத்தில் கதறி அழுத சிறுவன் - வீடியோ
அக்னிபத் போராட்டக்காரர்கள் மத்தியில் பள்ளி வாகனம் சிக்கியதால் அதில் இருந்த மாணவர் பயத்தில் கதறி அழுத வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக, வடமாநிலங்களில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறியது.
இந்நிலையில், பீகாரின் டர்பங்கா மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாலை பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு திரும்பிய வேன் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டது.
இதனால், வேனில் இருந்த பள்ளிக்குழந்தைகள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் சிலர் பள்ளி வேன் மீதும் கற்கலை வீசினர். இதன் காரணமாக அப்பகுதியே பதற்றமான சூழ்நிலையாக உருவானது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் நெருங்கியதால், வேன் மீதும் கற்கலை வீசி தாக்குதலை நடத்தியதாலும் வேனில் பள்ளிச்சீருடையில் இருந்த ஒரு சிறுவன் பயத்தில் கதறி அழுதுள்ளான். அந்த சிறுவனுடன் சக பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியையும் பதற்றமடைந்தனர். போராட்டக்காரர்கள் சிறிது நேரத்தில் அந்த பகுதியை விட்டு சென்றதால் அந்த சிறுவன் சற்று ஆறுதல் அடைந்தான். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.