திரிபுரா சட்டசபைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை - சீதாராம் யெச்சூரி
திரிபுரா சட்டசபைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், திரிபுரா சட்டசபைத் தோ்தல் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:-
திரிபுராவில் இடம்பெற்றுள்ள மொத்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 தொகுதிகள் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளன. கடந்த முறை பாஜக, திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த 20-இல் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால், இந்த முறை தோ்தலில் களம் காணும் பிரத்யுத் கிஷோா் மணிகியா டெபா்மாவின் திப்ரா மோத்தா கட்சி பழங்குடியின பகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎஃப்டி கட்சிக்கு இந்த முறை பாஜக 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளது. எனவே, கடந்த தோ்தலைப் போன்று பழங்குடியின பகுதிகளில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை. இந்தப் போட்டி இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கே பலனளிக்கும். மாா்க்சிஸ்ட் கட்சியின் இந்தக் கணிப்பை, தோ்தல் கருத்து கணிப்பு ஆய்வாளா்களும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
ஏனெனில் திரிபுரா பழங்குடியின பகுதிகளில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தோ்தல்களில் ஆளும் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணியை தோற்கடித்து பெரும்பான்மை இடங்களை திப்ரா மோத்தா கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, வாக்கு சதவீத அடிப்படையிலும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த முறை அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த 2018 தோ்தலில் பாஜக 43.59 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கட்சி 42.22 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 2 சதவீத வாக்குகளையும் பெற்றன.
இதுபோன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில், வரவிருக்கும் தோ்தல் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கே சாதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், திப்ரா மோத்தா கட்சியுடன் தோ்தலுக்கு முந்தைய கூட்டணி மேற்கொள்ளப்படவில்லை என்றபோதும், பாஜகவை தோற்கடிக்கும் அளவிலான திறமையுள்ள வேட்பாளரை நிறுத்துவதற்கு உள்ளூா் மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா்கள் அளவில் திப்ரா மோத்தா கட்சித் தலைவா்களுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்கும் வகையில் உடன்பாட்டை மேற்கொண்டுள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினாா்.