வயநாடுக்கும், எனக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது - ராகுல்காந்தி
பா.ஜ.க. அரசு எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும் வயநாடுக்கும், எனக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று ராகுல்காந்தி பேசினார்.
வயநாடு,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, தோடர் இன மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூடலூர் வழியாக கார் மூலம் கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றார். கல்பெட்டாவில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து ராகுல்காந்தி கையசைத்தார்.
இதையடுத்து கல்பெட்டாவில் பொதுக்கூட்டம் நடந்தது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
4 மாதங்களுக்கு பிறகு நான் மீண்டும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி பொதுமக்கள் முன்பு பேசி கொண்டிருக்கிறேன். நான் இக்கட்டில் சிக்கி தவித்த போது, வயநாடு என்னை பாதுகாத்து, ஆதரவளித்தது. பா.ஜ.க. அரசு என்னை எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும், எனக்கும், வயநாடுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது.
பிரித்தாளும் சூழ்ச்சி
மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் இந்தியாவின் புகழை உலகம் முழுவதிலும் மங்க செய்து விட்டது. உண்மையிலேயே இந்தியா மீது அக்கறை இருந்தால், பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை காப்பாற்றி இருப்பார். காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இணைந்து அங்கு சமாதானம், அன்பை விதைத்து மக்களை காப்பாற்றும். அங்கு மக்களை கொல்வது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும். பரஸ்பர அன்பும், நட்புறவு மட்டுமே நாட்டின் அடையாளங்கள் ஆகும். அதை காங்கிரஸ் திரும்ப கொண்டு வரும்.
மணிப்பூர் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி பா.ஜ.க. இந்தியாவின் மாண்பை குலைத்து விட்டது. நாட்டின் அடையாளத்தை அழிக்கவே பா.ஜனதாவும், பிரதமரும் முயற்சிக்கின்றனர். குடும்பங்களை பிரித்து கலவர பூமி ஆக்குவதே பா.ஜனதாவின் நோக்கமாகும். மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிவை சந்தித்து உள்ளன. ஆனால், காங்கிரஸ் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறது.
பிரதமர் தேசியவாதி அல்ல
மணிப்பூர் கொலைக்களம் ஆனபோது, அதுகுறித்து பிரதமர் மோடி பேசவில்லை. நாடாளுமன்றத்தில் நகைச்சுவையாக பேசி சிரித்தார். 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் குறித்து பேசியது, அவரது அக்கறை இன்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியா என்ற கருத்தை ஏற்காத பிரதமர் ஒரு தேசியவாதி அல்ல என்று அவர் பேசினார்.
அடிக்கல் நாட்டினார்
வயநாடு மாவட்டம் நல்லூர் நாடு பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆஸ்பத்திரி மற்றும் அம்பேத்கர் நினைவு புற்றுநோய் மையம் ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மின் பற்றாக்குறையை போக்கவும், உயர் மின்னழுத்த வசதியை ஏற்படுத்தவும் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த வசதியை நேற்று ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாலையில் கோழிக்கோடு அருகே கோடஞ்சேரி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ராகுல்காந்தி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ராகுல்காந்தி தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, கார் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.